உன்னைப்போல் ஒருவன் சுவாரஸ்யம்
தமிழ் மக்கள் ரசனைக்கேற்ப படம் எடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது மக்களை ஏய்க்கும் குணம். அறிவீனம். ஹிந்தியில் ஆமிர், அப் தக் சப்பன் என்று பல சினிமாக்கள் உலகத்தரம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டன. அப்படி ஒரு பயணம்தான் உன்னைப்போல் ஒருவன்.
ஹேராம் படத்தில் ஒரு வசனமுண்டு. வயதான சாகேத் ராம் கமலைப் பார்த்து பேரன் சாகேத் ராம், “எங்க தாத்தா எப்பவுமே ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்னு எந்தக் கதையையும் ஆரம்பிக்க மாட்டார். நான் இருந்த ஊர்ல ஒரு ராஜா இருந்தார்னுதான் ஆரம்பிப்பார்” என்பார். அதைப்போல பெரும்பாலான படங்களில் வெகுவாரியான முக்கியத்துவத்தைத் தன் கதாபாத்திரத்திற்கே கொடுப்பவர் கமல்.
ஆனால், இந்தப் படத்தின் நாயகன் என மோகன்லாலையே சொல்லவேண்டும். நடிப்பதற்கான அதிகபட்ச வாய்ப்பும் அவருக்கே. மிடுக்கான தோற்றமும் கம்பீரமான குரலுமாய் லால் இன்னொரு சிவாஜி. கமலுக்கு இயல்பான கதாபாத்திரம். தீபாவளிக்கு டிவி பேட்டி கொடுப்பதுபோல எல்லா காட்சிகளிலும் அனாசயமாய் நடித்துவிட்டுச் செல்கிறார். கருவறுத்தல் பற்றிப் பேசுகையில் நம்மையுமறியாமல் கண்களில் நீர் ஊறுகிறது.
ஆரிஃப் ஆக வரும் போலீஸ் கதாபாத்திரம் கன கச்சிதம். எங்கேயோ பார்த்ததுபோல இருக்கிறதே என்று யோசித்தால், அட… அபியும் நானும் படத்தில் சர்தார்ஜியாக வரும் ஹீரோ! கமல்ஹாசன் படத்தில் மற்ற நடிகர்களைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவமே.
சேதுராமனாய் வரும் மற்றொரு போலீசிடம் மோகன்லால், “ஒரு வேளை இந்த ஆப்ரேஷன் தோத்து நீங்க…” என்று ஆரம்பிக்கையில், “செத்துப்போய்ட்டான்னு கேக்க்றீங்களா சார், நோ ப்ராப்ளம் சார். ட்யூட்டி ஃபர்ஸ்ட்” என்கிறார். இப்படிப்பட்ட ஆட்கள் உண்மையிலும் இருக்கிறார்கள் என்று நினைக்கையில் நெஞ்சம் நெகிழ்கிறது.
ஷ்ருதியின் இசை எப்படி இருக்கிறதென்ற ஆர்வத்துடன்தான் சென்றேன். ஆனால், படத்தின் போக்கில் இசையை ஊர்ந்து கவனிக்கவில்லை. எப்படியும் மோசம் என்று சொல்லமுடியாது. இசை சரியில்லை என்றால் உடனே காட்டிக் கொடுத்துவிடும். கேமரா, தொழில்நுட்பம், வசனம் என அனைத்தும் கதையைச் சுற்றியே பயணிக்கிறது. பிரதானமாய். பிரமாதமாய்.
கமல்ஹாசனின் தீவிர ரசிகனானதால், விமர்சனத்தை இத்துடன் நிறுத்திக் கொள்வது நலமென்று தோன்றுகிறது. பாடல், நடனம், காதல், காமெடி, சண்டை, பஞ்ச் வசனம், ஏன்… ஹீரோயின் கூட இல்லாத தரமான தமிழ் சினிமா தந்த கமல்ஹாசனுக்கு எம் வந்தனங்கள். உன்னைப்போல் ஒருவனாய் இருக்க நாங்களும் விரும்புகிறோம்.
Post a Comment