கவிதைக்கு உண்மையும் அழகு..
1)முதலிரவு முடிந்த அடுத்த நாள்
நீ சோம்பல் முறிப்பதை
பார்க்கும் போது,
மீண்டும் முதலில்
இருந்து தொடங்கத்
தோன்றும் எனக்கு.
2)நீ முறித்துபோட்ட
சோம்பல்களை தேடுவதாய் சொல்லி
நான் காற்றில் துளாவும் போது
நீ சிரிப்பதில் இருக்கிறது
நம் அடுத்த சோம்பலுக்கான வித்து..
3)கண்ணாமூச்சி ஆட்டத்தில் என்
கண்களை நீ கட்டிவிடும் போதெல்லாம்
என் கண்கள்,
துணியை தாண்டி உன்னைப் பார்க்கும்
பரிணாம வளர்ச்சியை
பெற்று விடுகின்றன..
4)சேலை கடையில்
உன்னைப் பார்த்து,
"இந்த பொம்மை
கட்டியிருக்கும் சேலை
போல் வேண்டும்"என
கடைக்காரனிடம் கேட்கும்
பெண்களை பார்த்திருக்கிறேன்..
5)காமம் முடிந்தபின்னும்
கட்டிப்பிடிக்க முடியும்
என்பது,
காதலர்கள் மட்டுமே
அறிந்த ரகசியம்..
6)"பூவை பறித்துக்கொடு"
என அழுகும்
பெண்களை பார்த்திருக்கிறேன்..
"பூவை பறிக்காதே"
என அழுகும் பெண்
நீ மட்டுமே..!
7)அழகாய் இருக்கிறாய் என
நீ திமிர் செய்வதில்
வருத்தமில்லை எனக்கு..
என் வருத்தமெல்லாம்,
உன் அழகுக்கு
இந்த திமிர் பத்தாது
என்பதுதான்..!!
8)"ஒரே ஒரு முத்தம் கொடேன்" என
நான் கெஞ்சும் போதெல்லாம்,
நீ சொல்லும் "முடியாது போடா"க்கள்,
உன் முத்தங்களை விட அழகானவை..
அதற்காகவே பலமுறை
நான் முத்தம் கேட்டதுண்டு..!!
9)"ம்ம்ஹ்ம்ம், சீ, போடா" என்ற
வார்த்தைகளை மட்டுமே வைத்து
பல மணிநேரம் அழகாய் பேச
உன்னால் மட்டுமே முடியும்..!
10)"நாயே"என நீ செல்லமாய்
திட்டும் போதெல்லாம்
எங்கோ ஒரு நாய்
வாலையாட்டுவதற்கு பதிலாக
தலையை ஆட்டுகிறது..
11)அவ்வப்போது,
"நீ கணவனாய்
நான் மனைவியா
இருந்திருக்கக் கூடாதா?"
என நான் வருந்தியதுண்டு..
பிள்ளைப் பேறு என்ற பெயரில்
உனக்கு வலியைக் கொடுக்க
விரும்பவில்லை நான்..!
12)"நீ விளையாட்டுக்கு கூட
திட்ட மாட்டாயா?"என
நீ கேட்டபோது
திட்டுவதென்றால் என்ன என்பதே
எனக்கு மறந்துபோயிருந்தது!!
13)என் கவிதைகள்
என்னை விட
உனக்குதான் விசுவாசமாய் உள்ளன..
உன்னை வருத்தப்பட வைத்தால்
தானாக அழிகின்றன..
14)கவிதைக்கு பொய்யழகாமே!!
உன்னைப் பற்றிய கவிதைகளில்
உண்மையை சொல்கிறேனே,
பரவாயில்லையா உனக்கு?
Post a Comment