வேட்டைக்காரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சன் பிக்சர்ஸ் வழங்கும் வேட்டைக்காரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. விஜய் - அனுஷ்கா நடிப்பில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் படம் வேட்டைக்காரன். பாபுசிவன் இயக்கியுள்ள இப்படத்துக்கு விஜய் ஆன்டனி இசை. கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா, சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடந்தது.
இதற்காக விழா மேடையில் வெள்ளை குதிரையில் அமர்ந்து கவ்பாய் காஸ்ட்யூமில் விஜய் பாய்ந்து வருவதுபோன்ற பின்னணி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அதன் இருபக்கமும் பல கெட்டப்பில் விஜய்யின் பேனர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பாடல்களின் சி.டி.யை டைரக்டர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார் வெளியிட, விழாவில் பங்கேற்ற நட்சத்திர வி.ஐ.பி.க்கள் பெற்றுக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து படத்தில் விஜய் பலவித தோற்றங்களில் நடித்துள்ள டிரைலர் திரையிடப்பட்டது. படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களும் நேரடியாக அரங்கேற்றப்பட்டன. படத்தில் பாடிய பாடகர்களே மேடையில் எல்லா பாடல்களையும் பாடினர். ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் ஆட்டம் ஆடி, ஆரவாரம் செய்தனர்.
விழாவில் விஜய் பேசியதாவது:
இப்படத்தை தயாரித்துள்ள எம்.பாலசுப்ரமணியம் சிறந்த தயாரிப்பாளர். படப்பிடிப்பில் ஆலோசனை தந்ததுடன், எனக்கு நம்பிக்கையும் கொடுத்தார். கில்லி, குருவி படங்களில் தரணியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபுசிவன் இப்படத்தை இயக்கி உள்ளார். அவரது ஸ்டைலைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
இந்தப் படத்துக்கு விஜய் ஆன்டனி கடினமாக உழைத்திருக்கிறார். அவர் எந்த படத்துக்கு இசை அமைத்தாலும் 2 பாடல்களையாவது ட் செய்துவிடுவார். நினைத்தாலே இனிக்கும் படத்தில் பனாரஸ் பட்டுக்கட்டி பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. குத்து பாடல்களுக்கு இசை அமைத்தாலும் அதில் எங்காவது மறைத்து மெலடியை சேர்த்துவிடுவார்.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இப்படத்தை வாங்கி இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம். அதைக் கேட்டவுடன் சந்தோஷமாகவும், ஷாக்காகவும் இருந்தது. கலாநிதி மாறன், சக்ஸேனா மற்றும் அவரது குழுவினருக்கு எனது நன்றி.
இவ்வாறு விஜய் பேசினார். பின்னர் ரசிகர்கள் வற்புறுத்தியதால் நான் அடிச்சா தாங்கமாட்டே. பாடலின் சில வரிகளை விஜய் பாடினார்.
விழாவில் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, இயக்குனர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், மிஷ்கின், எஸ்.ஏ.சந்திசேகர், ஷோபா, தரணி, சிவா, லிங்குசாமி, சேரன், பேரரசு, கே.வி.ஆனந்த், ஆர்.கண்ணன், வி.வி.கதிர், தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், ராம்குமார், எடிட்டர் மோகன், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஜீவா, கார்த்தி, ரவிசங்கர், சலீம்கோஷ், சிபி, ஷாம், கருணாஸ், ஷக்தி, நகுலன், நடிகைகள் அனுஷ்கா, அனுஜா ஐயர், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, மோசர்பேர் தனஞ்செயன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment