feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

உன்னைப் போல் ஒருவன் விமர்சனம்

Labels:

ஒரே நாளில் நிகழும் கதை. ஒரே இடத்தில் நிகழும் கதை என்றும் சொல்லலாம். பாடல்களே இல்லாத படம். மிக வேகமான திரைக்கதை. இடைவேளை வந்ததே தெரியவில்லை (என்னப்பா அதுக்குள்ள இன்டர்வெல் விட்டுட்டான் - இது என்னுடைய மகள் மற்றும் பலர்). இன்டர்வெல் பாப்கார்ன் பக்கெட் தீருவதற்குள் கிளைமாக்ஸ் வந்து எந்த அலட்டலும் இல்லாமல் படமும் முடிவடைந்துவிடுகிறது.

சலங்கை ஒலி படத்தில் கமலின் நடன அசைவுகளை அறைகுறையாக படம்பிடிக்கும் ஒரு அசட்டு சிறுவனை ஞாபகமிருக்கிறதா? தசாவதாரம் படத்தில் அமெரிக்காவில் கமலுக்கு காரோட்டும் அமெரிக்க இந்தியனை ஞாபகம் இருக்கிறதா? அந்த அசட்டுச் சிறுவன்தான் இந்த அமெரிக்க இளைஞன். அந்த இளைஞன் தான் சக்ரி டோலட்டி. இந்தப் படத்தின் இயக்குனர். ஜெயித்துவிட்டார்.

படத்தின் ஹீரோ அறிமுக வசனகர்த்தா இரா.முருகன். பைனரி போல வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக அசத்தியிருக்கிறார். கமலுக்கு படத்தில் வசனம் மட்டுமே துணை. படத்தில் ஓரிரு காட்சிகள் தவிர அவர் எதிரில் ஆள் இல்லாமல்தான் தன்னுடைய ஆக்ஷ்ன் மற்றும் ரியாக்ஷன்களை காட்டி நடித்திருக்கிறார்.

படத்தில் கமலுக்கு பெயர் கிடையாது. எந்த மதம் எந்த ஜாதி என்கிற அடையாளம் கிடையாது. அவர் ஒரு காமன் மேன் அவ்வளவுதான். எந்தமாதிரியான காமன் மேன்? ஆர்.கே. இலட்சுமணனின் கார்டுன்களில் சமுக அவலங்களை ஓரமாக நின்று நையாண்டி பார்வை பார்க்கும் காமன் மேனா? இல்லை. நடுரோட்டில் (யாரோ) ஒரு கர்பிணிப் பெண்ணை மதத்தை காரணம் காட்டி சிதைத்த ஒரு கொடுர வர்க்கத்தின் கோரம் பொறுக்க முடியாமல் அவர்களை அழித்தொழிக்க முயலும் ஆக்ரோஷமான காமன் மேன்.

தீவிரவாதத்தை தீவிரவாதத்தால்தான் தகர்க்க முடியும் என்று சீறும் காமன்மேனுக்கும், அதிகாரவர்க்கத்தின் முரண்பாடுகளில் சிக்கித் தவிக்கும் ஒரு போலீஸ் கமிஷனருக்கும் இடையில் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் உன்னைப் போல் ஒருவன். கமல் ஆடு, மோகன்லால் புலி. புலி தான் ஜெயிக்கும் என்பது தெரிந்த கதை. ஆனால் திகட்டாத அறிவார்ந்த திரைக்கதையால் படம் வெற்றியடைகிறது.

ராகவன் மரார் என்ற பெயருடைய மலையாள கமிஷனராகவே படம் முழுக்க வந்து அசத்துகிறார் மோகன்லால். அபியும் நானும் படத்தில் “சிங்“காக வந்த கணேஷ் வெங்கட்ராம் இந்தப் படத்தில் ஃபிட்டான அதிரடிப்படை வீரராக ஜொலிக்கிறார். பரத்ரெட்டியும் ஓகே.

குஜராத், பெஸ்ட் பேக்கரி, மீனம் பாக்கம் குண்டு வெடிப்பு, கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு என கடந்த 15 ஆண்டு காலத்தில் மதத்தின் பெயரால் நடந்த அத்தனை துர் சம்பவங்களும் வசனங்களில் வந்து போகின்றன. கத்தியின் கூர்மையான விளிம்பில் நடப்பது போல அபாயமான விவகாரங்களை அருமையான உரையாடல்களாக மாற்றியிருக்கிறார்கள்.

உடன் வேலை செய்பவன் குண்டு பட்டு செத்தால் கூட காப்பாற்றாமல்,அதை செய்தியாக்கிவிட்டு, நாங்கள்தான் முதன் முதலில் இந்த செய்தியை படம் பிடித்தோம் என்று (துட்டு பார்க்க) விளம்பரம் தேடும் 'Exclusive' டெலிவிஷன் செய்தி நிறுவனங்களை ஒரு பிடி பிடித்திருக்கிறார்கள். அதுவும் கமிஷனரிடமே சிகரெட் கேட்கும் அந்த செய்திப் பெண்ணின் காரக்டர், மீடியாக்களின் அலட்சியம் மற்றும் அகம்பாவத்தின் உருவகம். 26/11 என்று வருணிக்கப்படும் தாஜ் ஹோட்டல் மற்றும் விக்டோரியா ரயில் நிலைய குண்டு வெடிப்பின் போது மீடியாக்களின் அசட்டுத்தனமான (Exclusive வெறி பிடித்த) கவரேஜை பார்த்துக்கொண்டே தீவிரவாதிகள் காய் நகர்த்தியதை இந்தப் படம் கிண்டலடிக்கிறது.

தீவிரவாதிகள் என்றால் அவர்கள் முஸ்லீம்கள்தான் என்று தற்போதைய உலகம் நினைப்பதை இல்லை என்று மறுக்க காமன்மேன் காரக்டர் மூலம் இந்தப் படம் சொல்ல முயல்கிறது. ஆனால் அந்தச் செய்தி சாதாரண இரசிகனை போய் சேர்ந்திருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. காரணம்? விசுவலில் (தீவிரவாத)முஸ்லீம்கள்தான் காட்டப்படுகிறார்கள். அவர்களின் கோபம் மட்டும்தான் காட்டப்படுகிறது. அவர்களால் பாதிக்கப்படும் (அப்பாவி)முஸ்லீம்கள் படத்தில் இல்லை.

எல்லா இடங்களிலும் எள்ளலும் துள்ளலுமாக வந்த வசனம், கடைசிக் காட்சியில் ஒரு வரி கூட இல்லாமல் போனதில் பல இரசிகர்களுக்கு ஒரு Unfinished உணர்வை தந்துவிட்டது. கிராமப்புறங்களில் இந்தப் படம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரியவில்லை.

நல்ல படம். வெற்றிப்படமா என்பது படத்தின் பட்ஜெட்டையும், பார்க்கும் இரசிகர்களின் எண்ணிக்கையையும் பொறுத்தது.





0 comments:

Post a Comment