feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

உன்னைப்போல் ஒருவன்

Labels:


'A' Wednesday என்ற பெயரில் இந்தியில் வெளியான திரைப்படத்தின் கதையானாலும், திரைக்கதையில் இந்தித் திரைப்படத்தின் சாயல் சற்றும் இல்லாமல் உன்னைப்போல் ஒருவனை படமாக்கியிருப்பது அருமை. குறிப்பாக 'A' Wednesday 26/11 மும்பை தாக்குதலுக்கு முன்னர் படமாக்கப்பட்டிருந்தது.

'தீவிரவாதத்தை எதிர்க்க தீவிரவாதம் தான் தீர்வாகும்' என்ற திரைப்படத்தின் மையக்கருத்து நடைமுறைக்கு எந்த அளவில் சாத்தியமென்ற விவாதம் ஒருபுறமிருந்தாலும் அது நிச்சயம் யோசிக்கப்பட வேண்டிய விஷயம் தான்.

சிறைகளில் தீவிரவாதிகளே இல்லையென்றால் அல்லது பிடிபட்ட தீவிரவாதிகளை பிடிபட்ட மாத்திரத்திலேயே கொன்றுவிட்டால் விமான கடத்தல்களுக்கும் அதனைத் தொடர்ந்த பேச்சுவார்த்தைகளுக்கும் இடமே இல்லாமல் போயிருக்கும் என்பது உண்மையே. அதனால் 26/11-மும்பை தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்பதும் சரியே

(எனினும் நியூயார்க்-9/11 லண்டன்-7/7 விதமான தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட தான் செய்வார்கள் என்ற உண்மையையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். )

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களை மட்டுமே தீவிரவாதிகள் என்ற முத்திரைக் குத்தாமல் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் எந்த சமூகத்தை சார்ந்தவரும் தீவிரவாதியே என சொல்லியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

கந்தஹார் சம்பவத்திற்காக முன்னாள் அரசை மறைமுகமாக சாடியிருப்பதும்; மும்பை 26/11 தாக்குதலின் போது தீவிரவாதிகளின் ஊடுவருவலுக்கு காரணம் யாரென உளவுத்துறையும் அரசும் Blame Game ஆடியதை குத்தியிருப்பதும்; Enough is Enough, 26/11 War என்ற தலைப்புகளில் குடைச்சல் கொடுத்த தொ(ல்)லைக் காட்சிகளுக்கும் குறிப்பாக தொலைக்காட்சி நிருபர்களுக்கு சவுக்கடி கொடுத்திருப்பதும் இயக்குனருக்கு சலாம் போட வைக்கிறது.

அதே போன்று 26/11 தாக்குதலுக்கு பின்னர் பொறுப்பற்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக மும்பை நகரமே ஒன்று கூடியது போன்ற நிலையை பேரணிகள், ஊர்வலங்கள் மூலம் ஏற்படுத்திய மும்பை நகர மக்கள் பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் எங்கு சென்றார்கள் என்ற கேள்வியை எழுப்பியிருப்பது சபாஷ் போட வைக்கின்றன.(நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மும்பையில் 45% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது)


கமல்ஹாசன் அவர்களின் பெயர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் போனதை திரையில் கமல் அவர்களே சொல்கையில் ரசிகர்களின் கூச்சல் காதைக் கிழிக்கிறது. வசன கர்த்தா இரா.முருகன் அவர்களுக்கும் , திரைக்கதையில் அசத்தியிருக்கும் கமல் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

மோகன்லாலின் நடிப்பு காவல்துறை ஆணையாளர் வேடத்திற்கு கனக்கச்சிதம், அவரது மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பு அந்த வேடத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது. லட்சுமி, சந்தானபாரதி இருவருக்கும் அதிக காட்சிகள் இல்லையென்றாலும் திறம்பட செய்திருக்கிறார்கள்.

வசனங்களில் அடிக்கடி வீசும் ஆங்கில வாடையை சற்றே குறைத்திருக்கலாம். ஸ்ருதிஹாசன் தனது அறிமுக இசையிலேயே அசத்தியிருப்பது திரைப்படத்திற்கு மேலும் பலம். திரைப்படத்தில் பாடல் காட்சிகள் இல்லையென்றாலும் கமல்ஹாசன் அவர்களே எழுதியிருக்கும் "நின்றே கொல்லும் தெய்வங்களும்; இன்றே கொல்லும் மதபூசல்களும்" போன்ற பாடல் வரிகள் நம்மை சிந்திக்கச் செய்பவை.

'உன்னைப்போல் ஒருவன்' சாமானியன் ஒருவனின் உள்ளக்குமுறல்.




0 comments:

Post a Comment