சினேகா மீது மான நஷ்ட வழக்கு?
எல்லாருக்குமே சிநேகாவை பிடிப்பது போல சர்ச்சைகளுக்கும் சிநேகாவை பிடிக்கும் போல...! சினிமாவில் சிநேகா அறிமுகமான புதிதில் டைரக்டர் சுசி.கணேசனுடன் மோதல்! அதன் பின் ஸ்ரீகாந்த்துடன் காதல், கலா மாஸ்டருடன் ஃபைட்டோ ஃபைட், நாக் ரவியுடன் எங்கேஜ்மென்ட், பெங்களூர் ரியல் எஸ்டேட் அதிபர் ராகவேந்திராவின் செக்ஸ் டார்ச்சர், என பலப்பல பரபரப்புகளை கடந்து இப்போது தன்னிடம் சில்மிஷம் செய்ததாக ஒரு அப்பாவியை தர்ம அடி வாங்க வைத்துள்ளார்.
திருச்சியில் உள்ள ஒரு நகைகடையில் (செப்.24) நடந்த விழாவில் சினேகா கலந்து கொண்டார். சினேகா நகைக்கடைக்கு வந்தபோது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக முன்னோக்கி சென்றனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அப்போது நெரிசலில் அங்கிருந்த ஒரு வாலிபர் சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சினேகா இதுபற்றி அங்கிருந்த காவலாளிகளிடம் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை நீலநிற சட்டை போட்டவர் என்று அடையாளம் காட்டினார்.
இதைத்தொடர்ந்து நீலநிற சட்டை அணிந்திருந்த ஒரு வாலிபரை கண்டுபிடித்த காவலாளிகள் அவரை இழுத்து சென்று அடித்து உதைத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபர் தாக்கப்படுவதை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், கடை காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் பின்பு தாக்கப்பட்ட வாலிபரையும், கடை காவலாளிகள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் திருச்சி காவேரி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) என்றும், அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.
இந்நிலையில் சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், நான் எனது கணவரும் 24.09.2009 அன்று காலை சின்னக்கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது அங்கு நடிகை சினேகா வந்து இருப்பதாக சொன்னார்கள். அவரை பார்க்கலாம் என்று நான் சொன்னதால் எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார். நாங்கள் ரோட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் 3 பேர் வேகமாக ஓடி வந்து எனது கணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். அதன் பிறகு எனது கணவரை விட்டு விட்டனர். எனது கணவரை தாக்கிய 3 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரை தாக்கியதாக நகைக்கடை காவலாளிகள் சார்லஸ் (37) அலங்கராஜ் (27) சரவணன் (31) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா,
நானும் எனது கணவரும் மோட்டார் சைக்கிளில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றோம். அப்போது ஒரு கடை முன்பு கூட்டமாக இருந்தது.
இதுபற்றி கேட்டபோது நடிகை சினேகா வந்திருப்பதாக கூறினார்கள். உடனே நான், சினேகாவை பார்க்க வேண்டும் என்று கூறினேன். உடனே எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு நின்றார். அப்போது கடையில் இருந்து வந்த 3 பேர்கள் அந்த புளு கலர் சட்டை போட்டவனை புடிங்கடா என கூறிக்கொண்டு ஓடிவந்தனர்.
எனது கணவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். நான் அழுதேன். எதற்காக எனது கணவரை அடிக்கிறார்கள் என்று கேட்ட போது சினேகா புளு கலர் சட்டைகாரணை புடிங்க என்று கூறியதால் பிடித்து அடித்ததாக கூறினார்கள்.
நாங்கள் நின்ற இடத்திற்கும் கடைக்கும் 200 மீட்டர் தூரம் இருக்கும் எனது கணவர் அப்படிப்பட்டவர் இல்லை. அநியாயமாக அவரை சினேகா அசிங்கப்படுத்தி விட்டார்.
சினேகா எங்கே சென்றாலும் இந்த பிரச்சினைதான். அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்து உள்ளேன்.
இச்சம்பவத்தால் எனது கணவர் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தவறு செய்யாத என் கணவர் மீது தாக்குதல் நடத்த காரணமான, நடிகை சினேகா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன உளைச்சலால் என் கணவர் ஏதாவது செய்து கொண்டால், அதற்கு சினேகா தான் பொறுப்பு என்று சர்மிளா கண்ணீருடன் கூறினார்.
Post a Comment