நடந்தவை நடப்பவை-6
நீச்சல் வகுப்பு இருப்பதால் சனிக்கிழமை காலை கஷ்டப்பட்டு எழுந்து ப்ரின்ஸஸ் தெருவில் பஸ் பிடிக்க செல்லும்போது விஸ்கி வாசம் காற்றில் மிதந்து வந்தது. வெள்ளி இரவு இந்த ஊர் மக்கள் ஏதோ திங்கள் கிழமை இருக்கிற எல்லா சரக்கையும் கடலில் கொட்டிவிடப்படும் என அரசாங்க ஆணை வந்தது போல் குடித்து தீர்த்து விடுவார்கள். அந்த போதையில் யாராவது பாட்டிலை ரோட்டில் கவிழ்த்து விட்டிருப்பான்(ள்) என நினைத்தால் வீட்டைவிட்டு வந்து வின்சென்ட் தெரு, ஹோவ் தெரு தாண்டி ஃப்ரெட்ரிக் தெருவந்து ப்ரின்ஸஸ் வரும் வரை எங்கும் அதே வாசம். எடின்பரோவில் வைக்கோல் சந்தை அருகே இருக்கும் காலடோனியன் வடிசாலை (distillery) ஞாபகம் வந்தது. நேத்து ராத்திரி ஊத்திக்கிட்ட சரக்கு ஞாபகமா இருக்க காலையில் காற்றில் மிதந்து வரும் விஸ்கி வாசம் இந்த ஊர் "குடி"மக்களுக்காகவே.
நீச்சல் குளம் இருக்குமிடம் தெரியாமல், ஒரு சின்ன போர்டு போட்டு இருந்தது. உள்ளே போனால் இரண்டு பாட்மிட்டன் கோர்ட் சைஸ்க்கு குளம் மிகவும் சுத்தமாக இருந்தது. போன இரண்டு வாரங்களாக வந்த ஆசான் லீவுல போனதால இந்த வாரம் மேரி என்ற புது டீச்சர். இரண்டொரு நிமிடங்களிலேயே இவர் குழந்தைகளுக்கான ஆசிரியை என தெரிந்து போனது:
நீ எங்க தங்கியிருக்கே?
எப்படி வந்தாய் பஸ்ஸுலயா? காருலயா?
இன்னிக்கி நல்ல மழ இல்லியா?
என இப்படி சம்பாஷனை போய்கொண்டிருந்தது, இறுதியில் இதெற்கெல்லாம் மகுடமாக வகுப்பு முடிய ஐந்து நிமிடம் இருந்த போது "சரி இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு உங்களுக்கு என்ன பன்ணனும்னு தோனுதோ அத பண்ணுங்க!!!" (do whatever you like) என்றாளே பார்க்கலாம். என் பையனை நீச்சல் வகுப்புக்கு அழைத்து சென்று அங்கு குழந்தைகளுக்கு வகுப்பு முடிவில் ஒரு ஐந்து நிமிடம் இப்படி சொல்லி விட்டுவிடுவார்கள் அது ஞாபகத்துக்கு வர என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
எனினும, எதையும் படிக்கனும் என வகுப்புக்கு வந்து விட்டால் வாத்தியாருக்கு நாம் எவ்வளவு வயதான போதும் குழந்தைகள் போல்தானோ என தோன்றியது.
மாலை மிக அருமையான வெய்யிலடித்ததால் வீட்டுக்கு அருகே இருக்கும் பொட்டானிக்கல் கார்டனை கண்டுபிடிக்கலாம் என நடக்க தொடங்கினேன். சில தூரம் வந்த பின் புகைபடக்கருவியை எடுத்து வந்திருக்கலாம் என்ற ஞானோதயம் கூடவே சோம்பேறித்தனமும் வந்ததால் சரி அடுத்த முறை பார்க்கலாம் என கார்டனுக்கு வந்து சேர்ந்தேன். நான் வந்த நேரம் மாலை 4.30 மணி. உள்ளே இருக்கும் கண்ணாடிவீட்டுக்கு வார இறுதி நாட்களில் மாலை 4 மணிக்கு மேல் அனுமதி இலவசம் என கேட்டுக்கு அருகே இருக்கும் போர்டு சொல்லியது. அஹா 3.50 பவுண்டு மிச்சம் என குதூகலமாக நடக்க தொடங்கினே.
உலகின் பல இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்கள், செடிகள். எல்லாவற்றுக்கும் அதன் பெயர் எந்த நாட்டை சேர்ந்தது என்ற குறிப்புகளுடன் மிக அழகாக வைத்திருக்கிறார்கள்.
காமிரா எடுத்து வரவில்லையென்றால் என்ன அதான் செல் காமிரா இருக்கிறதே என சில வற்றை க்ளிக்கினேன்.
இங்கு எடின்பரோவில் எங்கு பார்த்தாலும் பூத்திருக்கும் டஃபோடில்(daffodil), கான்சர் சொசைட்டியின் சின்னம்.
நடந்து நடந்து கண்ணாடிவீட்டுக்கு வந்தேன். ஏன் இதற்கு 3.50 பவுண்டுகள் என புரிந்தது. மிகப் பிரமாண்டம். கிட்டதட்ட நம்ம சிவாஜி "சஹானா பாடல் செட் மாதிரி". வெப்ப மண்டலம், மழைக்காடுகள், வரண்ட பகுதி, பாம் (palm) மரங்கள் என இந்த பூமி உருண்டையில் உள்ள அத்தனை சீதோஷ்ன நிலைகளையும் உள்ளடக்கிய பகுதிகள கொண்டது. கீழே உள்ள படம் மழைக்காட்டு பகுதியில் நுழைந்தபோது கண்ணாடியில் படியும் நீராவி எஃபெக்ட் மொபைலின் லென்சில் படிந்து அதனாலேயே அழகாக வந்த படம்.
வெப்ப மண்டல பகுதியில் ஒரு மூலையில் ஷோகேஸ் மாதிரி வைத்து இந்த மண்டலத்தில் விளையும் சில முக்கியமான் பொருட்களை வைத்திருந்தார்கள். வெல்லம், சோளம், கோதுமை, வாழை, மாம்பழம், எள்ளு.. என அப்படியே பார்த்தால் ஒரு அரிசி மூட்டை அதன் மேலே என்னவென்று பார்த்தால் நம்ம ஊரு MTR இன்ஸ்டன்ட் இட்லி மாவு பாக்கெட!! அட பரவாயில்லையே என் தோன்றியது.
மன்னிக்கவும் சற்று உள்ளடங்கியிருந்ததால் ஃபோகஸ் ஆகவில்லை.
எல்லாம் முடிந்து வெளியே வரும் நூழை வாயில் கேட்டுக்கு அருகே வந்த போது ஐந்தும் மூன்று வயதுமான் மகளையும் மகனையும் ப்டித்துக்கொண்டு ஒருவர் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தார். அப்போது நான் கேட்ட சம்பாஷனை:
மகள்: "அவ்வளவுதானா டாடி?"
அப்பா: "ம் ஆச்சு. இப்போ சமத்தா இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தா காருக்கு போயி அப்புறம் வீட்டுக்கு போகலாம்."
மகள்: "ம் சரி. அந்த அணில் எவ்வளவு நல்லா இருந்தது? க்ளாஸ்ஹவுஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அம்மவோட இன்னொருதரம் வரலாமா?"
அப்பா: "ம் வரலாம். சரி இப்போ போகரதுக்கு முன்னாடி ஒரு வேல பாக்கியிருக்கு. இன்னிக்கு நம்மள ஃப்ரீயா உள்ள விட்டாங்க இல்லியா, ஆனா எவ்வளவு செலவு செஞ்சு நல்லா வெச்சிருக்காங்க அத பாராட்றா மாதிரி நீங்க இப்ப இந்த காச அங்க வெச்சிருக்கிற டொனேஷன் உண்டியல்ல போட்டுட்டு வாங்க", என கூறி இருவருக்கும் சில்லறைகளை கொடுத்து அவர்களும் போட்டு விட்ட வந்தனர்.
இன்று அனுமதி இலவசம் என்று எனக்கு பட்டது சிற்றின்பமாக தோன்றியது.
மேல் நாட்டவரிடம் குழந்தைகளை வளர்க்கும் சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது.
Post a Comment