எங்கிருந்தோ ஒரு மழை வந்தது
இடியோசை கேட்கிலயோ?
மழையில் நடப்பது என்பது எனக்கு பிடித்தமான ஒன்று. சமீபத்தில் இடியோசையுடன் கூடி மழை சென்றவாரம். எடின்பரோவில் அவ்வளவாக மின்னலோ இடியுடன் கூடிய மழையோ கிடையாது. பலருக்கு மின்னலை பார்க்கவே முடியவில்லையே என்ற வருத்தமும் கூட. வழக்கத்தைவிட இந்த வருட வசந்த காலத்தில் (மார்ச்-மே) மழை கம்மி. பனிக்காலம் முடிந்தவுடன் இங்குள்ள செர்ரி ப்ளாசம் (Cherry Blossom) மரங்கள் இலையே இல்லாமல் பூத்து தள்ளிவிடும் பார்க்கவே மிக ரம்மியமாக இருக்கும். செர்ரி பழத்துக்கும் இந்த செர்ரி ப்ளாசம் மரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது வேறு வகை மரம் இது வேறு.
பல்கலைகழகத்துக்கு நடந்து செல்லும் வழியெங்கும் இந்த மரங்கள், வித விதமான வர்ணங்களில்..


நடந்துகொண்டே செல் காமிராவில் பிடித்ததால் அவ்வளவு சிறப்பாக வரவில்லை ஆயினும் அந்த அழகு காட்சியில் புரிபடும் என்று நினைக்கிறேன். வழக்கமாக பெஃபரவரி இறுதியில் பூத்துவிடும் இந்த மரங்கள் மார்ச் இறுதி தொடங்கி ஏப்ரலில்தான் பூக்கத் தொடங்கின. இப்படி பூக்கும் மரங்கள் கடந்து போன பனிக்காலம் எப்படி இருந்தது என்பதையோ அல்லது வர இருக்கும் கோடை எப்படி இருக்கக்கூடும் என்பதையோ எடுத்து கூறுவது போல் இருக்கிறது. அதனால்தான் இங்குள்ள மக்கள், இப்படி நடந்தால் அந்த வருடம் கோடை மிகவும் நன்றாக இருக்கும் என்ற ஒரு பழைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது மிகச் சரி என்பது போல கோலாகலமாக மழையே இல்லாத வெய்யிலோ வெய்யில் காயும் கோடை தொடங்கியுள்ளது.
நியுசியிலும் பனிக்காலம் முடிந்த பின் வச்ந்த காலத்தில் பூக்கும் பொஹுட்டுக்காவா மரங்களும் பார்க்க அழகாக இருக்கும்.
2007ல் நம்ம ஊருக்கு(தில்லி தொடங்கி, மதுரை வரை) போனபோது மரங்கள் இல்லாத பட்டினம் எங்கும், மக்கள், கட்டிடங்கள், கட்டிடங்கள், பின்பு மரங்களே இல்லாத வெளிகள். முன்பெல்லாம் நம்ம ஊரிலும் பூ பூக்கும் மரங்கள் இருந்தது. உதாரணத்துக்கு Flame or Fire of the forest என்று சொல்லப்படும் சிகப்பு வர்ணத்தில் பூக்கும் மரங்கள் இந்த செர்ரி மற்றும் பொஹுட்டுக்கு இணையான அழகு உண்டு.7% GDPயை நோக்கிய அசுர வளர்ச்சியில் இந்த மரங்கள் எல்லாம் காணமலே போய்விட்டன.
Wednesday, June 17, 2009 | 0 Comments
கடவுளும் கார்பனும்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
மேற்கண்ட இந்த திருவாதவூரர் என்கிற மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல், நான்கே வரிகளில் கூறுவது பரிணாம வளர்ச்சி தத்துவத்தை. மணிவாசகரின் காலம் எது என்பது இன்றும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. ஆனாலும் இதுவரை கிடைத்துள்ள சான்றுகள் மூலம் மாணிக்க வாசகர் வாழ்ந்த காலம் கி.பி. ஒன்பதான் நூற்றாண்டு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது 700-850 என்று வைத்துக்கொள்ளலாம். சரி இப்போது 2009க்கு வருவோம். இந்த் ஆண்டு,1809ல் பிறந்த Charles Darwinன் 200வது பிறந்த ஆண்டாகவும், 1859ல்அவர் வெளியிட்ட Origin of Speciesன் 150வது ஆண்டு பூர்த்தியானதையும் வேறு எங்கு கொண்டாடுகிறார்களோ இல்லயோ இங்கு இங்கிலாந்தில் இதற்காக சிறப்பு விழா, தொலைகாட்சி ஆவணப்படங்கள், வெளீயிடுகள் என கொண்டாடுகிறார்கள்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் பல மனிதனுடை வாழ்கையை மாற்றியிருந்தாலும், டார்வினின் இயற்கை தேர்வுத் தத்துவம் (Natural Selection) பல அரசியல் கொள்கைகள், இனவேறுபாடு காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் உயிர் பலிக்கும், ஆதாரமாக இருந்ததே அது இத்தனை வருடங்கள் தாண்டியும் இன்றும் அது முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலே நான்கே வரிகளில் மாணிக்கவாசகர் டார்வினுக்கு அயிரமாண்டுகள் முன்பே சொல்லிவிட்டுப் போனதுதான். ஆனால் என்ன திருவாதவூரர் தான் எழுதிய அந்த பாடலை நிரூபிப்பதற்காக, கப்பல் ஏறி தேசாந்திரமாக சென்று ஆயிரக்கணக்கில், இலைகளையும், பூச்சிகளையும், பறவைகளையும், ஏலும்புகளையும் 20 வருடமாக சேகரிக்கவில்லை என்பதே வித்யாசம். அறிவியலுக்கு தொட்டு, பார்த்து, உணரக் கூடிய அதாரங்கள் மிக அவசியம் அதை டார்வின் மிகவும் கஷ்டப்பட்டு சேகரித்தார். மாணிக்கவாசகரோ, ஆத்ம பூர்வமாக உணர்ந்ததால், நரியை பரியாக மாற்றி, ஆண்டவனையே பிட்டுக்கு மண் சுமக்க வைத்து, பின்பு எல்லோரும் பார்க்க ஈசனுள் மறைந்தார், என்பது சரித்திரம்.
இது சைவ சிந்தனை என்றால் வைணத்தில் பெரியாழவாரின் நான்காம்பத்து திருமொழியில் (பா:420)
தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமரி குறளும் ஆகி
மூ-உருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில்
என்று இந்த பரிணாம வளர்ச்சியை திருமாலின் தசாவதாரமாக சொல்லுகிறது. முதலில் மீன், ஆமை, பன்றி, நர-சிங்கம் , குள்ள மனிதன், பல் வேறு நிலைப் பட்ட மனிதன் என்பதே அது. ஏதோ உண்மையைக் கண்டுணர்ந்த பண்டைய இந்தியர்கள் உருவகப் படுத்தி புனைந்த புராணங்கள் வெறும் கற்பனையானதா?
சிந்தனைக்கு:
Peter Stein said: "In the internet nobody know you are a dog"
George Orwell said: " All animal are equal but some animals are more equal than others"
Monday, March 23, 2009 | 0 Comments