feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

கிணற்றில் நீர் இறைத்து குளித்த காலம்

Labels:

கிணற்றில் நீர் இறைத்து குளிப்பது என்பது தனி இன்பம் தான். அது ஒரு கனாக்காலம் மாதிரி ஆகிவிட்டது.அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு கிணறு என்பது சாதாரணம். முதலில் தென்னமட்டை திரி கயிறுதான் இருந்தது. பத்து வாளி இறைப்பதற்குள் கையை பதம் பார்த்துவிடும். இருந்தாலும் 20-30அடி ஆழத்தில் தண்ணி இருக்குமாதலால் அது சாத்தியம். பின்பு லாரி டயரை மெல்லிதாக ஒரு அங்குலம் அகலத்துக்கு நறுக்கிய கயிறு பிரபலமானது. யோசித்து பாருங்கள் தேய்ந்து போன லாரி டயரை ரீ-ட்ரட் செய்து அதுவும் தேய்ந்த பின்னரே இந்த மாதிரி கயிறு உரிக்க வரும். ரிசைக்கிலில் லாரி டயருக்கு இவ்வளவு உபயோகங்கள்.

துண்டை கட்டிக்கொண்டு, சத்தமாக ஒரு பாட்டையும் பாடிக்கொண்டு, இறைத்து இறைத்து தலையில் ஜோவென்று கொட்டிக்கொண்டு குளிப்பது மிக மிக ஆனந்தமான கணங்கள். சில சமயம் பறவைகள் கூட்டமாக தண்ணீரில் கும்மாளமிடுமே அது மாதிரி. ஒரு பத்து வாளி முடிந்த பின் லைஃபாயோ இல்லை காதிகிராம் குடீர் சோப்போ (என் அண்ணன் சொல்லுவான் குடீர் சோப், தேயோ தேய் என்று தேய்தால் நன்றாக நுரை வரும், உங்கள் வாயில் என) போட்ட பின் மறுபடி ஒரு பத்து வாளி. குளிச்சா இப்படில்ல குளிக்கணும். இப்ப முடிதா என்ன?

அப்ப மதுரல பவர்க்ட் ஆகும்(இப்பவும்தான்) அதுவும் மதியானம் நல்ல உச்சி வெய்யிலின்போது. கோடை விடுமுறை போது என் பாட்டி மதுரைக்கு வருவார்கள். இந்த மாதிரி பவர்கட் ஆகி வியர்த்துகொட்டிவிடும். நான் விளையாடிவிட்டு ஒரு மூன்று மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து குளிக்க செல்வேன். அப்போது பாட்டி வெக்கை அதிகமா இருக்குடா ஒரு ரெண்டு வாளி ஜில்லுன்னு இறைச்சு ஊத்துன்னு சொல்லுவாங்க. சரி வான்னு ரெண்டு என்ன, இந்தா இன்னும் ஒரு வாளி, இன்னும் ஒரு வாளின்னு இறைச்சு ஊத்திக்கிட்டே இருப்பேன். மிக மிக சந்தோஷமானது அது.

1982ல் மாடக்குளம் கண்மாய் உடைந்து வந்த வெள்ளத்தில் என் வீட்டில் இருந்த கிணற்றில் சிமிண்ட் உறைகள் தாறுமாறாக சரிந்துவிட்டது. அதை அப்படியே மூடி விட்டு பக்கதில் புதிதாக இன்னுமொரு கிணறு வெட்டினார்கள். ஒரு வருடத்திலேயே தண்ணீர் மட்டம், நான் கிணற்று உள்ளேயே இறங்கி கப்பு வைத்து வாளியில் தண்ணீர் ரொப்பி இறைக்குமளவுகு கீழே போய்விட்டது அதனால் இன்னும் ஆழமாக தோண்டவேண்டி வந்தது. பிறகு அதுவும் கீழே போனதால், ஒரு நல்ல முகூர்த்த நாளில், நல்லிரவில் கம்ப்ரசர் வைத்து 150 அடி ஆழத்துக்கு ஆழ்துளை போட்டு, மோட்டார் போட்டு ஸ்ட்ராவில் இளநி உறிஞ்சுவது போல சுலபமாக 5 நிமிடத்தில் 1000 வாளி் ரொப்பிவிடலாம் என்றாகிப் போனது. ஆக இப்போது கிணறும் இல்லை, பாட்டியும் இல்லை.

தேவைகள் என சேர்த்துக்கொண்டதால் என்னவெல்லாம் இழந்து விட்டோம்? இறைத்து குளித்தால் நல்ல தேக பயிர்சி, முதுகு வலி எல்லாம் வந்து கஷ்டப்படவேண்டாம். நல்ல பைசப்ஸ் கூட வரக்கூடும். தேவைக்கு அதிகமாக கண்டிப்பாக தண்ணீரை வீணடிக்க மாட்டோம். தண்ணீர் மட்டமும் கீழேஏஏஏ போயிருக்காது. ஆனாலும் யார் யோசிக்கிறார்கள் இதைப் பற்றியெல்லாம்?