feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

நடந்தவை நடப்பவை-6

Labels: ,

நீச்சல் வகுப்பு இருப்பதால் சனிக்கிழமை காலை கஷ்டப்பட்டு எழுந்து ப்ரின்ஸஸ் தெருவில் பஸ் பிடிக்க செல்லும்போது விஸ்கி வாசம் காற்றில் மிதந்து வந்தது. வெள்ளி இரவு இந்த ஊர் மக்கள் ஏதோ திங்கள் கிழமை இருக்கிற எல்லா சரக்கையும் கடலில் கொட்டிவிடப்படும் என அரசாங்க ஆணை வந்தது போல் குடித்து தீர்த்து விடுவார்கள். அந்த போதையில் யாராவது பாட்டிலை ரோட்டில் கவிழ்த்து விட்டிருப்பான்(ள்) என நினைத்தால் வீட்டைவிட்டு வந்து வின்சென்ட் தெரு, ஹோவ் தெரு தாண்டி ஃப்ரெட்ரிக் தெருவந்து ப்ரின்ஸஸ் வரும் வரை எங்கும் அதே வாசம். எடின்பரோவில் வைக்கோல் சந்தை அருகே இருக்கும் காலடோனியன் வடிசாலை (distillery) ஞாபகம் வந்தது. நேத்து ராத்திரி ஊத்திக்கிட்ட சரக்கு ஞாபகமா இருக்க காலையில் காற்றில் மிதந்து வரும் விஸ்கி வாசம் இந்த ஊர் "குடி"மக்களுக்காகவே.

நீச்சல் குளம் இருக்குமிடம் தெரியாமல், ஒரு சின்ன போர்டு போட்டு இருந்தது. உள்ளே போனால் இரண்டு பாட்மிட்டன் கோர்ட் சைஸ்க்கு குளம் மிகவும் சுத்தமாக இருந்தது. போன இரண்டு வாரங்களாக வந்த ஆசான் லீவுல போனதால இந்த வாரம் மேரி என்ற புது டீச்சர். இரண்டொரு நிமிடங்களிலேயே இவர் குழந்தைகளுக்கான ஆசிரியை என தெரிந்து போனது:

நீ எங்க தங்கியிருக்கே?

எப்படி வந்தாய் பஸ்ஸுலயா? காருலயா?

இன்னிக்கி நல்ல மழ இல்லியா?


என இப்படி சம்பாஷனை போய்கொண்டிருந்தது, இறுதியில் இதெற்கெல்லாம் மகுடமாக வகுப்பு முடிய ஐந்து நிமிடம் இருந்த போது "சரி இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு உங்களுக்கு என்ன பன்ணனும்னு தோனுதோ அத பண்ணுங்க!!!" (do whatever you like) என்றாளே பார்க்கலாம். என் பையனை நீச்சல் வகுப்புக்கு அழைத்து சென்று அங்கு குழந்தைகளுக்கு வகுப்பு முடிவில் ஒரு ஐந்து நிமிடம் இப்படி சொல்லி விட்டுவிடுவார்கள் அது ஞாபகத்துக்கு வர என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

எனினும, எதையும் படிக்கனும் என வகுப்புக்கு வந்து விட்டால் வாத்தியாருக்கு நாம் எவ்வளவு வயதான போதும் குழந்தைகள் போல்தானோ என தோன்றியது.

மாலை மிக அருமையான வெய்யிலடித்ததால் வீட்டுக்கு அருகே இருக்கும் பொட்டானிக்கல் கார்டனை கண்டுபிடிக்கலாம் என நடக்க தொடங்கினேன். சில தூரம் வந்த பின் புகைபடக்கருவியை எடுத்து வந்திருக்கலாம் என்ற ஞானோதயம் கூடவே சோம்பேறித்தனமும் வந்ததால் சரி அடுத்த முறை பார்க்கலாம் என கார்டனுக்கு வந்து சேர்ந்தேன். நான் வந்த நேரம் மாலை 4.30 மணி. உள்ளே இருக்கும் கண்ணாடிவீட்டுக்கு வார இறுதி நாட்களில் மாலை 4 மணிக்கு மேல் அனுமதி இலவசம் என கேட்டுக்கு அருகே இருக்கும் போர்டு சொல்லியது. அஹா 3.50 பவுண்டு மிச்சம் என குதூகலமாக நடக்க தொடங்கினே.

உலகின் பல இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்கள், செடிகள். எல்லாவற்றுக்கும் அதன் பெயர் எந்த நாட்டை சேர்ந்தது என்ற குறிப்புகளுடன் மிக அழகாக வைத்திருக்கிறார்கள்.

காமிரா எடுத்து வரவில்லையென்றால் என்ன அதான் செல் காமிரா இருக்கிறதே என சில வற்றை க்ளிக்கினேன்.





இங்கு எடின்பரோவில் எங்கு பார்த்தாலும் பூத்திருக்கும் டஃபோடில்(daffodil), கான்சர் சொசைட்டியின் சின்னம்.



நடந்து நடந்து கண்ணாடிவீட்டுக்கு வந்தேன். ஏன் இதற்கு 3.50 பவுண்டுகள் என புரிந்தது. மிகப் பிரமாண்டம். கிட்டதட்ட நம்ம சிவாஜி "சஹானா பாடல் செட் மாதிரி". வெப்ப மண்டலம், மழைக்காடுகள், வரண்ட பகுதி, பாம் (palm) மரங்கள் என இந்த பூமி உருண்டையில் உள்ள அத்தனை சீதோஷ்ன நிலைகளையும் உள்ளடக்கிய பகுதிகள கொண்டது. கீழே உள்ள படம் மழைக்காட்டு பகுதியில் நுழைந்தபோது கண்ணாடியில் படியும் நீராவி எஃபெக்ட் மொபைலின் லென்சில் படிந்து அதனாலேயே அழகாக வந்த படம்.



வெப்ப மண்டல பகுதியில் ஒரு மூலையில் ஷோகேஸ் மாதிரி வைத்து இந்த மண்டலத்தில் விளையும் சில முக்கியமான் பொருட்களை வைத்திருந்தார்கள். வெல்லம், சோளம், கோதுமை, வாழை, மாம்பழம், எள்ளு.. என அப்படியே பார்த்தால் ஒரு அரிசி மூட்டை அதன் மேலே என்னவென்று பார்த்தால் நம்ம ஊரு MTR இன்ஸ்டன்ட் இட்லி மாவு பாக்கெட!! அட பரவாயில்லையே என் தோன்றியது.

மன்னிக்கவும் சற்று உள்ளடங்கியிருந்ததால் ஃபோகஸ் ஆகவில்லை.

எல்லாம் முடிந்து வெளியே வரும் நூழை வாயில் கேட்டுக்கு அருகே வந்த போது ஐந்தும் மூன்று வயதுமான் மகளையும் மகனையும் ப்டித்துக்கொண்டு ஒருவர் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தார். அப்போது நான் கேட்ட சம்பாஷனை:

மகள்: "அவ்வளவுதானா டாடி?"

அப்பா: "ம் ஆச்சு. இப்போ சமத்தா இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தா காருக்கு போயி அப்புறம் வீட்டுக்கு போகலாம்."

மகள்: "ம் சரி. அந்த அணில் எவ்வளவு நல்லா இருந்தது? க்ளாஸ்ஹவுஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அம்மவோட இன்னொருதரம் வரலாமா?"

அப்பா: "ம் வரலாம். சரி இப்போ போகரதுக்கு முன்னாடி ஒரு வேல பாக்கியிருக்கு. இன்னிக்கு நம்மள ஃப்ரீயா உள்ள விட்டாங்க இல்லியா, ஆனா எவ்வளவு செலவு செஞ்சு நல்லா வெச்சிருக்காங்க அத பாராட்றா மாதிரி நீங்க இப்ப இந்த காச அங்க வெச்சிருக்கிற டொனேஷன் உண்டியல்ல போட்டுட்டு வாங்க", என கூறி இருவருக்கும் சில்லறைகளை கொடுத்து அவர்களும் போட்டு விட்ட வந்தனர்.

இன்று அனுமதி இலவசம் என்று எனக்கு பட்டது சிற்றின்பமாக தோன்றியது.

மேல் நாட்டவரிடம் குழந்தைகளை வளர்க்கும் சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது.



இன்னிக்கு மேடைய காலி பண்ணனும்..

Labels:

அடுத்த நட்சத்திரம் காத்திருக்கிறார்....

என்னத்த எழுத என்று 6 நாட்கள் ஓடி விட்டது. அவ்வளவாக பின்னூட்டமே விடாதவனுக்கு பின்னூட்டங்கள் வேறு.

வலைபதிவு எழுதுவது வெட்டி வேலையா? இல்லை என்றே தோண்றுகிறது. இதனால் எனக்கு என்ன நன்மை என்றெல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது தொடங்கியதுதான். நிறைய யோசிப்பவன் ஆனால் எதையும் யாரிடமும் சொல்லவதில்லை. எனக்கு நான் சிந்திப்பதை ஒர் இடத்தில் எழுதிவைக்கும் ஒரு நல்ல வடிகால் வலைப்பதிவு. நான்கு வருடங்கள் தாண்டியும் வலைபதிவு எழுதுவது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.

இதை படித்துக்கொண்டிருக்கும் உங்களை போன்ற முகமரியா வாசகரை சென்றடைய முடிகிறதே இதைவிட வேறு என்ன வேண்டும்?

உங்கள் வருகைக்கும் என்னை நட்சத்திரமாக்கி ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள் பல.

எனக்கும் எனக்கு முன்னால் நடசத்திரமானவர்களுக்கும் ஊக்கமளித்ததை போல வர இருக்கும் நட்சத்திரங்களுக்கும் உங்களின் ஆதரவு பல நல்ல பதிவுகளை வெளிக்கொண்டுவர நிச்சயம் உதவும்.

என் வலைக்கு வந்தவர்கள் நாளையும் என் வலைக்கு வருவீர்கள என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்..



எடின்பரோ நகர்வலம்

Labels:

இந்த ஊரை சேர்ந்த தற்கால எழுத்தாளர் ஜே. கே ரெளலிங்கை பற்றி எழுதாவிட்டால் ஹாரி பாட்டர் ஏதாவது மந்திரம் போட்டு அப்புறம் நான் பதிவே எழுத முடியாம போயிடகூடும் இல்ல வலைபதிவவெல்லாம் படிச்சு மனநோய் வந்துடும்.

எந்த ஒரு எழுத்தாளரும் இவர் அளவுக்கு தன் எழுத்து மூலம் சம்பாதித்ததில்லை. ஒரு 13 வருடம் பின்னால் சென்று பார்ப்போம். வாரம் £70 பவுண்டு அரசாங்கம் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு கொடுக்கும் உதவித்தொகையில், எடின்பரோவில் உள்ள காப்பி கடையில் ஆறிப்போன காப்பி குடித்துக்கொண்டு, பக்கத்தில் ப்ராமில் மகள் ஜெஸ்ஸிகாவை வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறார்.

யோசித்துப்பாருங்கள் உங்களில் எத்தனை பேருக்கு ஒரு காப்பி கடையில் உட்கார்ந்து எழுத முடியும்? சரி, காப்பி கடையில் ஏன்? இவருடைய குழந்தை ப்ராமில் வைத்து தள்ளிக்கொண்டே சென்றால்தான் தூங்குமாம். அப்படியே ஒரு காப்பி கடையில் நுழைந்து அங்கு உட்கார்ந்து எழுதுவது பழக்கமாகிவிட்டது. அது தவிர எழுதும் போது பாதியில் எழுந்து சமையலறைக்கு சென்று காப்பி போடவேண்டாம் பாருங்கள்.

முதல் திருமணம் முறிந்த பின் மனச்சோர்வுக்கு ஆட்பட்டு தற்கொலை முயற்சி எல்லாம் செய்திருக்கிறார். அந்த மனநிலையில் தோன்றிய ஒரு கருதான் டெமென்டார்ஸ் என்ற ஆத்மா இல்லாத ஒருவித ஆவிகள்.

40 வயதிற்குள் பில்லியனர் ஆன ஒரே (பெண்) எழுத்தாளர். ராபர்ட் ப்ரூஸ் மாதிரி 12 பதிப்பகங்கள் திருப்பி அனுப்பியும் விடாது 13ம் முறையாக ப்ளும்ஸ்பெரி பதிப்பகத்துக்கு அனுப்பி வைத்தார். முதன் முதலில் இவர் அனுப்பி வைத்த கதையை படித்து அலைஸ் நியூடன் என்ற பத்து வயது ப்ளும்ஸ்பெரி பதிப்பகத்தின் சொந்தக்காரரின் மகள் தன் அப்பாவிடம் சுவாரசிமாக இருப்பதாக சொன்னதால் சரி இதை பதிப்பித்துதான் பார்ப்போம் என அவர் £1500 பவுண்டு சன்மானம் கொடுத்து முதல் பாட்டர் கதையை ஏற்றுக்கொண்டார்.
ரெளலிங்கின் இன்றய எல்லா புகழுக்கும் காரணமானவள் இந்த அலைஸ்.


எடின்பரோவில் மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கு கூட சிலை இருக்கிறது. Greyfriars Bobby என்கிற நாய்க்கு. இவுக கிட்டதட்ட இவரு சகா HMV நாய் மாதிரிதான். தன் எசமானர் கிட்ட அவ்வளவு விசுவாசம். எப்படின்னா எசமானர் இறந்து 14 வருஷம் வரைக்கும் அவருடைய சமாதியை விட்டு போகவேயில்லை. எசமானர் இல்லாத இந்த நாய விட்டு வெக்கிரது நல்லதில்ல போட்டு தள்ளிரனும்னு(!!) சிலர் சொல்லியிருக்காங்க. ஆனா ஒரு சில நல்ல மனிதர்கள் தலையிட்டு அதோட லைசென்சுக்கு நாங்க பணம் தரோம் ஆனா நாய் எடின்பரோ நகர மன்றத்தின் பொறுப்பு என முடிவு செய்தனர். அப்புறம் 1872ல் இவரு இறந்த உடனே அவரோட எசமானரின் சமாதிக்கு அருகேயே அடக்கம் செய்திருக்கிறார்கள். இவர வெச்சு புத்தகங்கள் இரண்டு திரைப்படங்கள் எல்லாம் வந்திருக்கு.




ஸ்காட்லேண்டில் கண்டுபிடிக்கப்பட்ட சில சமாச்சாரங்களையும் பார்ப்போம்:

ஜேம்ஸ் ஸ்காட்: நீராவி இன்ஜின்.

அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் : பென்சிலின்

சார்லஸ் மக்கிண்டோஸ்: ரெயின்கோட்

ஜேம்ஸ் யங்: பாரஃபின் ஆயில்

கிர்க்பாட்ரிக் மெக்மிலன்: இரு சக்கர சைக்கிள்

லார்ட் கெல்வின்: கெல்வின் அளவு, thermodynamics

ஜான் பாய்ட் டன்லப்: நவீன டயர்

அலெக்ஸாந்தர் க்ராஹாம் பெல்: தொலபேசி

ஜான் லொகி பாய்ட்: தொலகாட்சி சாதனம்

இது தவிர ஃபாக்ஸ் மெஷின், தெர்மாஸ் ப்ளாஸ்க், ராடார், இன்சுலின், தபால் முத்திரை, கோல்ஃப், மருதுவ ஊசி, கணித மடக்கை (logirthm), தசம புள்ளி (decimal point), சேமிப்பு வங்கி முறை, மோட்டார் வாகன காப்புறுதி..

இது எல்லாம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? இவர்கள் உலகுக்கு அளித்துள்ளது மிக நீண்டது...



மொக்கை:

நாம் இந்த பதிவுல நன்றியுள்ள நாய்கள பத்தி பாத்தோம். ஆனா இந்த BMW கார் கம்பெனிக்கு நாய்ங்க அப்டீக்கா காருமேல உச்சா போரது சுத்தமா புடிக்கவே இல்ல. அதுனால புதுசா ஒரு டெக்னாலஜி கண்டுபிடிச்சிருக்காங்க. அது என்னன்னா நாய் இந்த புது டெக்னாலஜி பொருத்திய கார் மேல உச்சா போச்சுன்னா அந்த உச்சா வழியா நாய்க்கு ஒரு ஷாக் அடிக்கும். இரண்டு தடவ இப்படி அனுபவ பட்டுச்சுன்னா அப்புறம் தென்னாலிராமன் பூன மாதிரி கார பாத்தாலே வால இடுக்கிட்டு ஓரமா ஓடிரும்னு இந்த கம்பெனி சொல்லுது.

எனக்கென்னவோ இந்த டெக்னாலஜி நம்ம ஊர்ல ஆசாமிங்களுக்கு தேவை. நம்ம முக்கிய நகரங்கள்ள குப்பைதொட்டி பக்கம், ட்ரான்ஸ்ஃபார்மர் பின்னாடி, இண்டு, இடுக்கு இங்கெல்லாம் இந்த சாதனத்த பொருத்தி உச்சா போனா ஜிக்கு ஷாக் அடிக்றா மாதிரி செஞ்சா கொஞ்சம் பொது இடத்துல சூச்சூ போரது குறையும்னு நினைக்கிறேன்.



எடின்புரத்து மக்களை விஞ்சிய மொக்கை

Labels:

நம்ம ப்ரியதர்ஷனிஅதாங்க மடிக்கணணி sticky key error-னால ஊத்திகிச்சுன்னு சொன்னேல்ல, அது என்னன்னா டைப் அடிச்சு அடிச்சு ஏதாவது ஒரு கீ அதுபாட்டுக்கு அமுங்கியே இருக்கும் அதுனால நீங்க ரீ பூட் பண்ணும் போது bios கீ போர்டை தேடும்போது சத்தம் போடும் பூட் ஆகாது. முதலில் ஏதாவது வைரசோ என நினைத்தேன். பின்பு கூகுளித்ததில் கீ தான் பிரச்சனை என உறுதியானது. 9 சொச்ச பவுண்டுகளுக்கு ஈபேயில் ஒரு உபயோகித்த கீ போர்ட் ஆர்டர் செய்துள்ளேன் அது வந்த பின்னால் தான் அது சரி செய்ய முடியும். இந்த பதிவு இரவல் தர்ஷனியில்.

சரி மீண்டும் தொடருவோம்: ஆக ப்ரின்ஸஸ் தெருவில் உள்ள சிலைகள் இப்படி தங்கள் துறையில் சிறந்து விளங்கியவர்கள், சமுதாயத்துக்கு உறுப்படியாக ஏதாவது செய்தவர்கள் என பார்த்து பார்த்து அமைத்துள்ளனர். கோடை வர இருப்பதால் (ஜுலை முதல் செப்டம்பர் வரை) பிரின்ஸஸ் பூங்காவை வெட்டி, கொத்தி, பதியன்கள் போட்டு, பெயிண்ட் அடித்து தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருக்கும் மரங்களும் வசந்த காலமாதலால் இளம் துளிர்களை விட்டு இவர்களுடன் சேர்ந்து கோடைக்காக தானும் தயாராவது போல் உள்ளது.

எடின்பரோவில கோடை மிகப்பிரசித்தம். இங்கிருக்கும் கோட்டையில் எடின்பரோ டாட்டூஸ் என்று ஸ்காட்லாண்டை சேர்ந்த ராணுவ அணிவகுப்பு ஜூலை தொடங்கி மாதம் முழுவதும் தினமும் நடக்கும். இவர்களின் தேசிய உடையான கில்டில் (kilt) பேக்பைப்பர் இசையுடன் நடை பெறும். இதற்கான டிக்கெட் விற்பனை டிசம்பர் மாதமே தொடங்கி பெப்ரவரி முடிவதற்குள் விற்று தீர்ந்து விடும். இவர்களின் kiltஐ வைத்து இவர்கள் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என கண்டுபிடித்து விடலாம். கிட்டதட்ட 5000க்கும் மேல் கில்ட் வகைகள் உள்ளது. Scottish Tartans Authorityயிடம் ஒவ்வொரு கில்டையும் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.

உலாவை இத்தோடு நிறுத்தி, இன்று மொக்கை சற்று நீளமாக இருப்பதால்:


மொக்கை:

இது உண்மையாக நடந்த விஷயம். இந்த மருத்துவ நண்பர் மூலம் அறிந்துகொண்டது.

CT மற்றும் அல்ட்ரா ஸ்கான் நிபுனரான இவரிடம் ஒரு இள வயதுக்காரர், வயது 30 இருக்கலாம், அல்ட்ரா ஸ்கேனுக்காக அனுப்பப்பட்டிருந்தார். அனுப்பியவர் இளவயதுக்காரரின் மனைவியின் கைனகாலஜிஸ்ட். திருமணமாகி குழந்தை பிறக்கவில்லையாதலால் மனைவியை சோதித்து குறை ஒண்றும் இல்லாததால் கணவனை ஸ்கேன் செய்ய சொல்லி இந்த நிபுணரிடம் வந்து இருக்கிறார்.

வந்தது ultrasound scan of the scrotum; அதாவது ஆண் மலட்டு தன்மைக்கான சோதனை. மருத்துவர் அந்த நபரை உள்ளே அழைத்து மேசை மீது படுக்க வைத்து பொதுவான கேள்விகள் கேட்டிருக்கிறார். எப்போது திருமணமானது, எவ்வளவு நாட்களாக குழந்தைக்காக முயற்சி செய்கிறார்கள், வேறு என்ன சோதனைகள், சிகிச்சைகள் செய்தனர் போன்றவை. ஸ்கேன் தொடங்குவதற்கு முன்பு பார்த்தால் அந்த நபருக்கு இரண்டு விறைகளுக்கு பதிலாக ஒன்றுதான் இருந்திருக்கிறது. மருத்துவர் அதனால் முதலில் கைகளால் சோதித்து பார்த்ததில் இடது பக்கத்தை காணோம். சில சமயம் சிலருக்கு உள்பக்கமாக அமைய வாய்பிருப்பதால், அல்ட்ரா ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். அதிலும் வலது பக்கம் இருந்தது இடது பக்கம் இல்லை என உறுதியானது. பின்பு மறுபடி அந்த நபரிடம் பேச தொடங்கினார்:

மரு: இதுக்கு முன்னாடி எந்த டாக்டராவது சோதிச்சிருக்காங்களா?

நபர்: இல்லையே

மரு: இல்ல எப்பவாவது நீ குழந்தையா இருந்த போது யாராவது சோதிச்சு இத பத்தி சொல்லியிருக்காங்களா?

நபர்: இல்லை இதுதான் முதல் தடவை

மரு: உனக்கு ஒரு விறைதான் இருக்கிறது அது உனக்கு தெரியுமா?

நபர்: (கலக்கத்துடன்) அப்படியா?

மரு:(இப்போது சந்தேகத்துடன்) பொதுவா ஒரு ஆணுக்கு இரண்டு விறைகள் இருக்கும் அது தெரியும்தானே?

நபர்: ம்ம்ம் வந்து அதுவும் தெரியாது

மரு:!!!!(அதிர்ச்சி, ஆச்சர்யம்)....

மருத்துவர் ஸ்கேனை முடித்து ரிசல்டை கொடுத்து அந்த நபரை அனுப்பி வைக்கும்போது அந்த நபர் பார்ப்பதற்கு மிக டீசென்ட்டாக இருந்ததால் மருத்துவர் அவரிடம் என்ன படித்திருக்கிறீர்கள் என கேட்ட போது,

நபர்: M.B.A.!!


----------------------------------------------

ஆக ஒரு பக்கம் பத்து பதினெஞ்சுலேயே பழுத்துடுது, இன்னொரு சாரார் இப்படி. இரண்டுமே தவறு. தங்களுடைய உடலமைப்பு, பிறப்புறுப்புக்கள் மேலும் செக்ஸை பற்றிய புரிதல்கள் இப்படித்தான் இருக்கிறது.

இதில் இன்னுமொரு முக்கியமான விஷயம், சரி அந்த நபருக்குத்தான் தெரியவில்லை, அவர் மனைவிக்கு? ஆண்களே இப்படி என்றால் பெண்கள் நிலை இன்னும் மோசம். பலர் தங்கள் திருமணத்திற்கு பிறகு கண்வன் மூலமே அறியே வேண்டிய சுழ்நிலையில் இருக்கிறார்கள்.

சரி இதுக்காகதான் இப்படிப்பட்ட மக்களுக்க ஒருத்தர் தொடர் எழுதினா அதையும "ஆடுத்தவன் வாந்திய திங்கறவன்" அதாவது plagiaristன்னு சொன்னா இன்னாதான்பா செய்யுரது?